காவேரி கூக்குரல் இக்கணமே செயல்படுவோம்!
’காவேரி கூக்குரல்’இயக்கத்தின் தொடக்க விழாவில் சத்குரு பேசும்போது, “என்றென்றைக்கும் காவேரி நம்மை அரவணைத்து நமக்கு வளம் சேர்த்திருக்கிறாள். இப்போது நாம் காவேரியை அரவணைத்து வளம் சேர்ப்பதற்கான நேரம் வந்திருக்கிறது. காவேரி கூக்குரலிட்டு அழைக்கிறாள், கேட்பதற்கான இதயம் உங்களுக்கு உண்டா ?” என்று பேசினார்.
இந்த இயக்கத்தின் முதல் பணியாக வறண்டு வரும் காவேரி நதியை மீட்க வேண்டியதன் உடனடி தேவை குறித்து மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக வரும் செப்டம்பரில் சத்குரு அவர்கள் கர்நாடகாவில் உள்ள தலகாவேரியில் (குடகு) தொடங்கி தமிழகத்தில் உள்ள திருவாரூர் வரை மோட்டார் பைக்கில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து காவேரி நதி மீட்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்காக 2017-ம் ஆண்டு கர்நாடக அரசுடன் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12 ஆண்டுகளில் காவேரி நதிப்படுகைகளில் அரசு மற்றும் விவசாய நிலங்களில் 242 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான களப்பணிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக, 73 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. காவேரி நதியை மீட்பதோடு மட்டுமின்றி விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கர்நாடகம் மற்றும் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன்பெறுவர்.
இதற்காக காவேரி நதிப்படுகையில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி வேளாண் காடாக மாற்றப்பட உள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் கள உதவிகளை ஈஷா அறக்கட்டளை செய்து தர உள்ளது. ஈஷாவின் தொடர் முயற்சியால் தமிழகத்தில் 69,670 விவசாயிகள் பயிர் சாகுபடி முறையில் இருந்து வேளாண் காடு வளர்க்கும் முறைக்கு மாறியுள்ளனர். அதில் முன்னோடியாக திகழும் விவசாயிகளின் வருமானம் 5 முதல் 7 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நன்கொடை அளிக்க !
எதனால் காவேரி வற்றி வருகிறது?
இந்தியாவிலுள்ள பெரும்பாலான நதிகளைப் போல, காவேரியும் காடுகளிலிருந்தே பிறக்கிறது. சரித்திரத்தில் இப்பகுதி எப்போதுமே காடுகளாலும் மரங்களாலும் நிறைந்து இருந்துள்ளது. விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் தாவரக் கழிவுகள் மூலமாகவும், மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் தொடர்ந்து கிடைத்தவண்ணம் இருந்தது.
மண் ஈரப்பதத்தை உறிஞ்சி நதிக்குச் சேர்ப்பதற்கு, உயிர்மப் பொருளே வழிசெய்தது. ஆனால் மக்கள்தொகை அதிகரித்து மரப்போர்வை குன்றும்போது மண்ணிற்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. எனவே மண் தண்ணீரை உறிஞ்ச இயலாமல் மண்ணரிப்பு ஏற்படுகிறது. மண் நதிக்கு நீர் சேர்க்காததால் நதி வறண்டுவருகிறது. குறைந்துவரும் நீரோட்டமும் குன்றிவரும் மண்வளமும் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகிறது, விளைச்சல் குறைகிறது.
தீர்வு என்ன ?
மண்தான் தீர்வு. மண்ணிற்கு மீண்டும் ஊட்டச் சத்துகளையும் உயிர்மச்சத்துகளையும் சேர்த்தால், மண் செழிக்கும், மழைநீரை உறிஞ்சும், காவேரிக்கு நீர் சேர்க்கும். இது நதியின் சூழலியலை மேம்படுத்துவதோடு விவசாயியின் பொருளாதார சூழ்நிலையையும் மேம்படுத்தவல்லது.
மரங்கள் நடுவதுதான் மண்வளத்தை மீட்க மிக சுலபமான, செலவு குறைவான வழி. அரசு நிலத்தில் நாட்டு ரக மரங்களை நடமுடியும். தனியார் விளைநிலங்களில் விவசாயிகள் வேளாண் காடுவளர்ப்புக்கு மாறமுடியும்.
வேளாண் காடு வளர்ப்பின் பலன்கள்:
ஒரே விளைநிலத்தில் வழக்கமான பயிர்களுடன் பழமரங்களையும் வெட்டுமரங்களையும் வளர்ப்பதே வேளாண் காடுவளர்ப்பு. நதிநீர் பெருகுகிறது. மரங்களிலிருந்து வரும் விளைச்சல் விவசாயிகளுக்கு வருமானம் தருகிறது. மரங்கள், பூச்சிகளின் தாக்குதலைக் குறைப்பதோடு, மண்வளத்தை மேம்படுத்தி மண்ணரிப்பைத் தடுக்கின்றன. எனவே விளைச்சல் அதிகரிக்கும், வருமானமும் அதிகரிக்கும். அதோடு வெட்டுமரங்கள் அவசரகாலங்களில் விவசாயிகளுக்கு வருமானம் தரவல்லவை.
என்னால் எவ்வாறு இதற்கு உதவ முடியும்?
242 கோடி மரங்கள் நடவேண்டுமானால் அதற்கு பல வகையான நாட்டு மரக்கன்றுகளை உருவாக்க வேண்டும். இதற்காக ஆகும் செலவினை கணக்கிட்டு தோராயமாக ஒரு கன்றுக்கு ரூ.42 வீதம் மக்களிடம் நன்கொடையாக கேட்கப்படுகிறது, இப்படியாக பெறப்படும் நன்கொடைகளை நிர்வகிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் உள்ளடக்கிய ஒரு பிரத்யேக குழுவும், அதனை தணிக்கை செய்ய உலகாளாவிய தணிக்கை நிறுவனம் ஒன்றும் பணியமர்த்தப்பட்டுள்ளது
இதற்காக காவேரி நதிப்படுகைகளில் நூற்றுக்கணக்கான நர்சரிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிலங்களை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து மரக்கன்றுகள் வளர்க்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன., மேலும் கர்நாடகாவில் கூர்க் பகுதியில் உள்ள காபி தோட்டங்களிடம் மரக்கன்றுகள் வளர்க்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஏன்னென்றால் அங்கு இருக்கும் தட்பவெப்ப சுழ்நிலைக்கு அங்கு செடிகள் வேகமாக வளரும் வாய்ப்புள்ளது என்று சொல்லபடுகிறது.
அது மட்டுமில்லாமல் விவசாயிகளே அவர்கள் நிலத்தில் செடி வளர்த்துக் கொடுக்கும் வாய்ப்புகளையும் உருவாக்க பேசப்பட்டு வருகிறது. செடிகள் வளர்த்து விற்பதே ஒரு தொழிலாக செய்ய அவர்களை பயிற்றுவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நதிகள் மீட்பு இயக்கம் ஆரம்பிக்கபட்டு இரண்டாண்டுகள் முடிய போகிறது, இரண்டாண்டுகளில் நிறையவே நடந்திருகிறது, ஆனால் நதிகள் மீட்பு என்பது ஓர் இரவில் நடந்துவிடக் கூடிய செயல் அல்ல, ஒரே அமைப்பினாலும் செய்து முடித்துவிடக் கூடிய காரியமும் இல்லை, இது மக்கள், அரசாங்கம், தனியார் அமைப்புகள் என எல்லோரின் கூட்டு முயற்சி, இதில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பங்குபெற்றால் நதிகளை பழைய நிலைக்கு மீட்டு வர முடியும் என நம்பிக்கை கொடுக்கிறது நதிகள் மீட்பு இயக்கம்.